என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்திய வாலிபர்
- இந்த ஊருக்கு அழிவு காலம் வரப்போகிறது என கூறி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
- நெஞ்சு வலிப்பதாக கூறியதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூலக் குரும்ப பாளையம் உள்ளது. இந்த ஊரில் ஸ்ரீ அண்ணமார் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இந்த கோவில்களில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 55) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர் ஸ்ரீ அண்ணமார் கோவிலுக்கு சென்று முன்புறம் இருந்த சிமெண்டிலான சிலையின் கழுத்து பகுதியை சேதப்படுத்தினார். குதிரையுடன் கூடிய காவல் தெய்வம் சிலை, பாம்பட்டி அய்யனார் சிலை, நாகர் சிலைகளை அடித்து உடைத்தார். பின்னர் 7 இரும்பு வேல்களையும் கீழே சாய்த்து போட்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் எதற்காக இப்படி செய்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அந்த மர்மநபர் அப்படிதான் உடைப்பேன். இந்த ஊருக்கு அழிவு காலம் வரப்போகிறது என கூறி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.பொதுமக்கள் இது குறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவிலுக்கு விரைந்து சென்றார். அங்கு சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பூசாரி சண்முகம் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில் சிலைகளை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பது தெரிய வந்தது. அவர் குடிபோதையில் கோவில் சிலைகளை உடைத்தது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது சுரேஷ்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் 108 ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






