என் மலர்
உள்ளூர் செய்திகள்

அன்னூர் அருகே குடிசை வீட்டில் தீ விபத்து 4 குழந்தைகளுடன் தப்பிய இளம்பெண்
- அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள காட்டம்பட்டி முதலிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவருக்கு சொந்தமான குடிசை வீடு அந்த பகுதியில் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் வாடகைக்கு குடியேறினார். அவர் குடிசை வீட்டில் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இரவு இளம்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கினார்.
அப்போது திடீரென வீட்டில் மேற்கூரையில் தீ பிடித்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சத்தம் போட்டனர். உடனடியாக இளம்பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
அதற்கு தீ மளமளவென குடிசை முழுவதும் பரவியது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இது குறித்து அன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






