என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயிர்கள் தடுப்பணை இல்லாததால் காய்ந்து வருகிறது.
திருக்குவளை அருகே சங்கிலியன் வாய்க்காலில் நிரந்தர தடுப்பணை அமைத்து தர வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- சங்கிலியன் வடிகால் வாய்க்காலில் 60 ஆண்டுகளாக நிரந்தர தடுப்பணை இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
- தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் 40 நாட்கள் பயிராக உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள சித்தாய்மூர் ஊராட்சி கீரம்பேர் பகுதி வழியாக செல்லும் சங்கிலியன் வடிகால் வாய்க்காலில் 60 ஆண்டுகளாக நிரந்தர தடுப்பணை இல்லாததால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் மண் மூட்டைகள் கொண்டு தற்காலிகமாக தடுப்பணை அமைக்கப்பட்டு மழை காலங்களில் அவை அடித்து செல்லப்படுவதோடு பாசன நேரத்தில் விவசாயிகள் போதிய தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கீரம்பேர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெரிய பெருமாள்கோட்டகம், சத்தியமங்கலம், குளவஞ்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300 ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் 40 நாட்கள் பயிராக உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.
மேலும் ஜனவரி 28-ந் தேதி கல்லணை மூடப்பட்டு பாசனத்திற்கான நீர் நிறுத்தப்படும் நிலையில் இப்பகுதியில் உள்ள மண் தடுப்பணை மூலமாக சேகரமாகியுள்ள நீர் முழுவதும் வீணாகி விடுவதால் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
சுமார் 60 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து தற்போது வரை நிரந்தரமாக தடுப்பணை அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதி விவசாயிகள் நிதி திரட்டி ஒவ்வொரு முறையும் மண் மூட்டைகள் கொண்டு தற்காலிக தடுப்பணை அமைத்து வருவதாகவும், தமிழக அரசு தலையிட்டு பொதுப்பணி துறை மூலமாக எதிர்வரும் ஆண்டில் நிரந்தர தடுப்பணை அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






