என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் தள்ளுவண்டி கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கும்பல்
- பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசுகேட்கிறாய் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்தனர்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது31).
இவர் காரமடை பஸ் நிலையம் அருகே தள்ளு வண்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு கடந்த வாரம் பாக்கியராஜ் என்பவர் வந்தார். அவர் உணவு சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக செந்தில்குமார் மற்றும் பாக்கியராஜூக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் செந்தில் குமார் கடையை கவனித்து கொண்டு இருந்தார். அப்போது காரமடையை சேர்ந்த கோகுல் கிருஷ்ணன்(22), காரமடை மரியபுரத்தை சேர்ந்த அலெக்ஸ் என்ற ஞானராஜ் (27), பாக்கியராஜ் (47) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் செந்தில் குமார் கடைக்கு வந்தனர்.
பின்னர் செந்தில் குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் அவரிடம் பட்டா கத்தியை காட்டி யாரிடம் காசுகேட்கிறாய் என கூறி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த செந்தில்குமார் இது குறித்து காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுல்தான் இப்ராகிம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






