என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கல்லூரி மாணவர்
- மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
- மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கமாக கார், லாரி, மோட்டார் சைக்கிள்கள், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கோவைக்கும், பொள்ளாச்சிக்கும் சென்ற வண்ணம் இருந்தன.
அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 2 வாலிபர்கள் இருந்தனர்.
எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது கார் இடது புறமும், வலது புறமும் வளைந்து நெளிந்து சென்றது.
மேலும் அதிவேகத்திலும் கார் வந்ததால் அந்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகளும், சாலை யோரம் நடந்து சென்றவர்களும் அச்சம் அடைந்தனர்.
பின்னர் வேகமாக சென்ற அந்த காரை பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து அந்த காரை மடக்கி பிடித்தனர்.
அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். இதையடுத்து மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார் நடுரோட்டில் நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பின்னர் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்து, ரெயில் நிலை வாகன நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன்(21) என்பதும், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை வேகமாகவும், மதுபோதையில் இயக்கி வந்ததற்காகவும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அந்த மாணவருக்கு இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனபோக்குவரத்து தடைபட்டது. போலீசார் அதனை சரி செய்த பின்னர் வாகனங்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






