என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி
- விக்னேஷ் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது.
நெல்லை:
நெல்லை டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 19).இவர் நெல்லையை அடுத்த சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் டவுனில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். சீதபற்ப நல்லூரை அடுத்த வெள்ளாளங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சுமார் 50 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் சீதபற்பநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






