search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னார்குடி அரசு பள்ளியில் 3-வது புத்தக திருவிழா நாளை தொடக்கம்
    X

    மன்னார்குடி அரசு பள்ளியில் 3-வது புத்தக திருவிழா நாளை தொடக்கம்

    • மாலை 6 மணிக்கு கண்காட்சியை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா திறந்து வைக்கிறார்.
    • புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து "மன்னார்குடி 3-வது புத்தக திருவிழா- 2023" நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 27-ந் தேதி வரை 10 நாட்கள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பிரபல பதிப்பகங்கள் பங்கேற்று ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

    மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 15 சதவீதமும், பொதுமக்களுக்கு 10 சதவீதமும் தள்ளுபடி விலையில் நூல்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டு ரூ.70 லட்சம் விலையுள்ள நூல்களை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள புத்தக திருவிழா பேரணியை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைக்கிறார்.

    மாலை 6 மணிக்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கண்காட்சியை திறந்து வைக்கிறார்.

    விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் வசந்த பாலன் கலந்து கொண்டு உரை ஆற்றுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட நூலக அலுவலர் முருகன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

    முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி புனித வளனார் பெண்கள் மேல்நிலை பள்ளி, சவளக்காரன் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஆகிய அணிகளுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நூல்கள் வாங்கலாம் என விழாக்குழு சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×