என் மலர்
உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அருகே தொழிலாளி வீட்டில் 3 பவுன் நகை கொள்ளை
- பாபு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
- 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (வயது 40). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுகிறது. இதனால் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் வெளியில் படுத்து உறங்கினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பாபு கண் விழித்தார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






