search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சுதந்திர தின விழாவையொட்டி 2,500 போலீசார் பாதுகாப்பு
    X

    கோவையில் சுதந்திர தின விழாவையொட்டி 2,500 போலீசார் பாதுகாப்பு

    • கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
    • பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தொடங்கியது.

    கோவை,

    சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.

    தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.

    சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 1,700 போலீசாரும், புறநகரில் 800 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெ ட்டுகள், பஸ் நிலையங்களில் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர்.

    அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். அவர்களின் முகவரியை பெற்ற பின்னரே அவர்களை விடுவிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பஸ் நிலையங்கள் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.

    கோவையில் கடந்த சில தினங்களாகவே போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றன்.

    இதுதவிர மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் ஆகியவற்றிலும் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருந்தால் பிடித்தும் விசாரித்தும் வருகின்றனர்.

    கோவையில் உள்ள கோவை சந்திப்பு ரெயில் நிலையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அங்கு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுதந்திர தினத்தையொட்டி வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவு செய்யப்படுவதை தடுக்க சைபர் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.

    சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.

    Next Story
    ×