search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணன் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
    X

    அண்ணன் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை

    • பங்குச்சந்தையில் பணம் இழந்ததால் கைவரிசை
    • வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் 2 பேரும் சிக்கினர்

    கோவை,

    கோவை கணபதி தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது30). இவர் சங்கனூர் பகுதியில் பேக்கரி மற்றும் டைல்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி பிரேம்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றார்.

    பின்னர் மறுநாள் கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் நடமாட்டம் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகைகளை கொள்ளையடித்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு காமிராவில் பதிவான வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தனர்.

    விசாரணையில் நகைகளை கொள்ளையடித்தது பிரேம்குமாரின் சித்தப்பா மகன் மரிய அமிர்தம் (37) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து உதவி கமிஷனர் பார்த்திபன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    பிரேம்குமார் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டுக்கு சென்ற மரிய அமிர்தம் தொழில் முறையிலான கொள்ளையர்கள் திருடுவது போன்று வீட்டு பீரோவில் இருந்த உடைமைகளை களைத்து போட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். சொந்தமாக தொழில் செய்து வரும் மரிய அமிர்தம் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து உள்ளார். எனவே அவர் அதனை ஈடு செய்யும் வகையில் தனது சொந்த பெரியப்பா மகன் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    மேலும் கணபதி வ.உ.சி. நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த யூசூப் (47) என்பவர்களையும் கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்து காரமடையில் பதுங்கி இருந்த அவர்களை கைது செய்துள்ளோம்.

    கோவையில் நகை கொள்ளை சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் வெளியூர் செல்லும் போது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்து விட்டு செல்ல வேண்டும்.

    இதனால் ரோந்து பணியில் போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பதன் மூலம் கொள்ளை சம்பவங்களை குறைக்க முடியும். மேலும் வீட்டை பூட்டும் போது வெளிப்பக்கமாக பூட்டு தெரியும் படி பூட்டாமல் உள்பக்கமாக பூட்ட வேண்டும். பூட்டு வெளியே தெரிந்தால் அது வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு கொள்ளையர்கள் கண்களை உறுத்தும். எனவே கொள்ளை சம்பவங்களை குறைக்க மக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அவருடன் சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் செல்வி உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.

    Next Story
    ×