search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னையன்
    X
    பொன்னையன்

    அ.தி.மு.க.வை பா.ஜ.க. பின்னுக்கு தள்ள முயற்சி- முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேச்சு

    அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை நிர்வாகிகளுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    இந்த ஆண்டுக்கான கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடந்தது. பேரவை மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த கூட்டத்தை நேற்று முன்தினம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டு மேம்பாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து பேரவை மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த நிறைவு நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் பா.ஜ.க. குறித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையை நிறைவேற்ற வேண்டாம், கர்நாடகத்துக்கே காவிரி நீரை தர வேண்டும் என கர்நாடக பா.ஜ.க. கூறுகிறது. உச்சநீதிமன்றம் கூறியபடி காவிரி நீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என தமிழக பா.ஜ.க. கூறினால் வரவேற்கலாம்.

    ஆனால் அ.தி.மு.க. பின்னுக்கு தள்ளப்படும் பிரசாரத்தை பா.ஜ.க. மறைமுகமாக செய்கிறது. நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    முல்லை பெரியாறு பிரச்சினை, காவிரி பிரச்சினை போன்றவற்றில் தமிழக பா.ஜ.க. குரல் எழுப்புவது இல்லை. இதை மக்களுக்கு புரியவைக்க வேண்டும். தோழமை கட்சி என்பதால் நாம் இதை செய்ய வேண்டாம். சமூக வலைதளங்களில் இதை பரப்ப வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவு என்ற கருத்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் உள்ளது. அதை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சட்டசபை தேர்தல் முடிவின் போது வெளிப்படையாக கூறினார். பா.ஜ.க.வால் தான் அ.தி.மு.க. தோற்றது என்று பகிரங்கமாக கூறினார்.

    அ.தி.மு.க. அதிருப்தியாளர் புகழேந்தியும் இதே கருத்தை வலியுறுத்தினார். இந்த நிலையில் பொன்னையனும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×