search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.
    X
    செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் தலைநிமிர முடியாது என்று சொல்லும் அளவுக்கு உழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு வழங்கி உள்ளார். கலைஞர் பிறந்தநாள் விழாவை மற்ற மாவட்டங்களை விட சிறப்பாக கொண்டாடினோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.  ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 

    மாவட்ட கழகம் சார்பில் 99 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தேதி கொடுத்த உடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இதே போன்று இளைஞர் அணி ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. 5 ஆயிரத்து 300 பேருக்கு உணவு மற்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்டத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, எந்த வகையில், கட்டுக்கோப்புடன் செயல்படுகிறது என்பது தெரியாத நிலை உள்ளது. ஆகையால் இளைஞர்கள் இயக்கத்தின் வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் மூத்த முன்னோடிகளை அழைத்து வந்து மாணவர் அணி, மகளிர் அணி, தொழில்நுட்ப அணி, இளைஞர் அணிக்கு விளக்கி கூற உள்ளோம். 

    கொடி கட்டுவது, ஊர்வலம் செல்வது மட்டும் இயக்கம் அல்ல. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையின மக்கள் நலனுக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மக்கள் பணி மூலம் தி.மு.க.வை எவராலும் வெல்ல முடியாது என்ற வகையில் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் கலைஞரின் 99-வது பிறந்தநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இளைஞர்கள், தாய்மார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் கழக உடன்பிறப்புகளிடமும் நன்மதிப்பை பெற்று மக்கள் தொண்டாற்றி வரும் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், திராவிட மாடல் ஆட்சி முறை பற்றிய பயிற்சி பட்டறை மாவட்டம் முழுவதும் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, ஜெயக்குமார் ரூபன், மாவட்்ட துணை செயலாளர்கள் ஆறுமுக பெருமாள், முகமது அப்துல்காதர், பொருளாளர் ராமநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், மாணவர் அணி அருண் குமார், மகளிர் அணி ஜெசி பொன்ராணி, விவசாய அணி ஆஸ்கர், ஆதிதிராவிடர் நலக்குழு டி.டி.சி.ராஜேந்திரன்,ஓன்றிய செயலாளர் ஜெயக்கொடி,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×