search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    நெல்லையில் இருந்து நாளை முதல் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம்

    நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக 2 முறை பயணிகள் ரெயில் இயக்கம் நாளை முதல் இயக்கப்படுகிறது.
    நெல்லை:

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. நிறுத்தப்பட்ட ரெயில்கள் அனைத்தும்  தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் தற்போது சிறப்பு ரெயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரெயில்களாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை-செங்கோட்டை, நெல்லை-திருச்செந்தூர் ரெயில்கள் கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவுக்கு முன்பாக நாளொன்றுக்கு 4 முறை திருச்செந்தூர், செங்கோட்டைக்கு இயக்கப்பட்டு வந்த இந்த பயணிகள் ரெயில், கொரோனாவுக்கு பின்னர் காலை, மாலை என 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    தற்போது நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு ரெயில் புறப்பட்டு 9.05 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்தடைகிறது.

    இதேபோல் நெல்லை-செங்கோட்டை இடையே நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 5.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்தும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 2 வழித்தடங்களிலும் ரெயில்களை பழையபடி 4 முறை இயக்கவேண்டும் என்றும், இதனால் வீரவநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, ஆழ்வார்குறிச்சி, தென்காசி பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பயன் அடைவார்கள் என்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் தென்னக ரெயில்வே சார்பில் செங்கோட்டை, திருச்செந்தூருக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயில்(06662) காலை 6.40 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு, காலை 8.50 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.

    இதேபோல் மறுமார்க்கமாக நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில்(06657) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும் வகையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ரெயில்களில் 10 பொது பெட்டிகளும், 4 சிலீப்பர் பெட்டிகளும் என மொத்தம் 14 பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. இந்த ரெயில்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

    இதில் நெல்லை-செங்கோட்டை மாலை ரெயில் நாளை முதலும், செங்கோட்டை-நெல்லை காலை ரெயில் நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதலும் இயக்கப்பட உள்ளது.

    இதேபோல் திருச்செந்தூரில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில்(06674) காலை 9 மணிக்கு நெல்லை வந்தடையும். மறுமார்க்கமாக மாலையில் 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் அந்த ரெயில்(06677) இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் போய் சேருகிறது. இந்த 2 பயணிகள் ரெயில் நாளை முதல் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×