search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக
    X
    திமுக

    தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்கள்- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, பொன்முடி, ஆலந்தூர் பாரதி உள்ளிட்ட தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மேடையில் மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து இருந்தனர்.

    இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தந்தை பெரியாரிடம் கற்றுத்தெளிந்த லட்சியப் பிடிப்பின் அடிப்படையில், தன்னைத் தமிழ் உலகிற்குப் பிரகடனப்படுத்திக்கொண்ட கொள்கைச் சிகரமாம் “தமிழினத் தலைவர்” கலைஞரின் 99-வது பிறந்த நாளினையொட்டி, அவரது மங்காப் பெரும்புகழ் அவனியில் என்றும் பரவி, எப்போதும் நிலைத்திடும் வகையில், அவர் நாள்தோறும் சிந்தித்து சிந்தித்து பொலிவும் வலிவும் கூட்டிப் ‘‘புதிய தலைமைச் செயலக கட்டிடம்” கட்டிய ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், தமிழக அரசின் சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில், இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கலைஞரின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைக்கும் பெருமைமிகு நிகழ்வுக்கு, கழக மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்களின் இந்தக் கூட்டம், நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து,

    6-வது முறையாக கழக ஆட்சி அமைந்திடவும், ஆருயிர்த் தலைவர் கலைஞரின் முழு உருவச்சிலையினை அரசின் சார்பில் நிறுவிடவும், ஓய்வறியாச் சூரியனாய் ஒவ்வொரு நாளும் உழைத்து, ஓராண்டு சாதனைகளால், ஒட்டுமொத்த இந்தியாவிலும் அனைத்துத் தரப்பினரின் கருத்தையும் கவனத்தையும் ஈர்த்து, இந்திய மாநிலங்களின் முதல்-அமைச்சர்களில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ள முதல்-அமைச்சராக மிக உயர்ந்து நிற்கும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, நெஞ்சத்தில் ஊற்றெனப் பெருக்கெடுத்துவரும் பாராட்டுகளைத் தெரிவித்து அளவிலா மகிழ்ச்சி அடைகிறது.

    “தமிழினத் தலைவர்” கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3-ம் நாள், தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கிய இடம் பெறத் தக்க வகையில், அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்ட கழகத் தலைவரும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, கழக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் நன்றி நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

    ‘‘தமிழினத் தலைவர்” கலைஞரின் பிறந்த நாளையொட்டி, மாவட்டக் கழகங்கள் தொடங்கி ஒன்றிய-நகர-பேரூர்-பகுதி-வட்ட-கிளைக் கழகங்கள் வரை, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தி, கழகக் கொடியேற்று விழாவையும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் சிறப்பாக நடத்துவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    அடுத்த ஆண்டு (2023) நூற்றாண்டு விழா காண விருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரையும்; அவர் உயிரென எண்ணிக் கட்டிக்காத்த இயக்கத்தின் கொள்கைகளையும், அவர் வழியில் “திராவிட மாடல்” ஆட்சி நடத்தி, ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்துள்ள கழகத் தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளையும், இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்த்திடும் வகையில், மாநிலம் முழுவதும் ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’க் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    இளைய பட்டாளத்தின் இணையற்ற கைகளில், கருத்தியல் ஆயுதங்களை வழங்கிடும் வகையில் கழகத்தின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அணிகள் இத்தகைய கூட்டங்களை அரங்குகளிலும்-இணைய வழியாகவும் தொடர்ந்து நடத்திட முறையான திட்டங்கள் வகுக்கவும், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கழகங்கள் செய்திடவும் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.


    Next Story
    ×