என் மலர்
உள்ளூர் செய்திகள்

சரமாரி வெட்டு
தி.மு.க. பிரமுகர் உள்பட 2 பேருக்கு சரமாரி வெட்டு- 4 பேர் கும்பல் வெறிச்செயல்
ஆட்டையாம்பட்டி அருகே தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). அயோத்தியாபட்டணம் ஒன்றிய தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நாகராஜ் ஒன்றிய செயலாளரிடம் ரூ.67 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பணம் கேட்டு மிரட்டுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகராஜ் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி அங்கு அனுப்பி வைத்தனர். பணமோசடி செய்ததாக அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையால் நாகராஜ் சங்ககிரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டையாம்பட்டி வழியாக நாகராஜன் தனது நண்பர் பிரித்திவிராஜுடன் மோட்டார்சைக்கிளில் வக்கீலை பார்ப்பதற்காக சேலம் வந்தார்.
அப்போது ஆட்டையாம்பட்டி எஸ்.பாலம் அருகே வந்த போது அங்கு நின்ற 4 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து நாகராஜை வெட்டியது. இதில் அவருக்கு பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. பிரித்திவிராஜ் தப்பி ஓடும்போது அவரையும் அந்த கும்பல் வெட்டியது. அப்போது அந்த வழியாக வந்த மக்களை பார்த்ததும் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story






