search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொளுத்தும் வெயில்
    X
    கொளுத்தும் வெயில்

    நாளை விடைபெறும் அக்னி நட்சத்திரம்- இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும்...

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.
    சென்னை:

    கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரத்தின் காலகட்டம் மே 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்கள் ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் நாளை (28-ந்தேதி) விடைபெறுகிறது.

    இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதன் காரணமாக அக்னி வெயிலின் உச்சம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்டது.

    அதன்படி அக்னி நட்சத்திரம் தொடங்கிய கடந்த 4-ந்தேதி முதலே வெயில் வறுத்தெடுக்க தொடங்கியது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் பெய்தது.

    அசானி புயல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் ஆகிய காரணங்களால் தமிழகத்தின் பல பகுதிகளில் அக்னி நட்சத்திர கால கட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தபடியே காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது சுமார் 2 வார காலத்திற்கு மேலாக வெயில் தணிந்தே காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது

    இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்தின் போது அதிகபட்சமாக கடந்த 23-ந்தேதி மீனம்பாக்கத்தில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

    அதேபோல் கடந்த 24-ந்தேதி சென்னை, மீனம்பாக்கம், கடலூர், கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் அனல் சுட்டெரித்தது. மேலும் 24-ந்தேதி தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது.

    நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், ஈரோடு, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல்லில் தலா 100 டிகிரியும் வெயில் பதிவானது.

    அக்னி நட்சத்திரம் நாளை முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×