search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்களிடையே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்
    X
    மீனவர்களிடையே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது எடுத்த படம்

    காட்டுப்பள்ளியில் 16 மீனவ கிராம மக்கள் திடீர் போராட்டம்

    16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

    இதனால் வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1,750 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக தனியார் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் நிர்வாகத்தினர் அறிவித்தனர்.

    இதில் முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

    மீதமுள்ள 1500 பேருக்கு வேலை வாய்ப்பு, நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிலம் வழங்கிய மீனவ கிராமமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழவேற்காடு, தாங்கள் பெரும்புலம் அரங்ககுப்பம் கூணங்குப்பம் திருமலை நகர்,சாட்டங்குப்பம், செம்பாசி பள்ளி,கலங்கரை விளக்கம், நடுக்குப்பம், நக்கத்துரவூ, பேட்டை, பள்ளிகுப்பம், கோரைக் குப்பம், பசியா வரம், உள்ளிட்ட 16 மீனவ கிராம மக்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாமல் இன்று காலை குடும்பத்துடன் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் துறைமுக வாசல் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை வாய்ப்பு மற்றும் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.

    பெண்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்அறிந்ததும் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்படடனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப் படுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே குவிந்து உள்ளனர். தொடர்ந்து மீனவ கிராமமக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ கிராமமக்கள் கூறும்போது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் முன்னிலையில் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்குவதாக கம்பெனி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இது வரை கம்பெனியில் வேலை வாய்ப்பு வழங்க வில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர்.

    Next Story
    ×