
திருப்போரூர்:
திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான சத்தியசாய் மருத்துவ கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களில் 7 பேருக்கு கடந்த மாதம் 30ந்தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மேலும் 18 பேருக்கு தொற்று உறுதியானது. ஏற்கனவே ஐ.ஐ.டி.யில் 172 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் இந்த கல்லூரியிலும் கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் ராகுல்நாத், துணை இயக்குனர் பரணிதரன் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
வெளியூர் மற்றும் உள்ளூரில் இருந்து முதலாம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கி இருந்தவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் லேசான அறிகுறிதான். எனவே பதட்டப்பட தேவையில்லை.
மொத்தம் 2 விடுதிகள் உள்ளன. அவற்றில் 900 மாணவமாணவிகள் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்கள் தனிமையில் வைக்கப்பட் டுள்ளார்கள்.
விடுதிகள் அமைந்துள்ள பகுதிகள் முழுமையாக சுகாதாரத்துறை கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்லூரியுடன் இணைந்து மருத்துவ மனையும் இருப்பதால் அங்கு நோயாளிகள் பலர் வருவார்கள். எனவே அவர்களுக்கு தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி.யில் கொரோனா தொற்று உறுதியானதும் மருத்துவ குழுவினர் முகாமிட்டு அனைவரையும் பரிசோதித்து கட்டுப்படுத்தினார்கள். அதேபோல் கண்டுபிடிக்கப்படும் அனைவருக்கும் தீவிரசிகிச்சை அளித்து பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.
அதேபோல் இந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள்.
இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதையும் படியுங்கள்... பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி பரிசு - சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு