என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.
    X
    வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம்

    நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லையில் மிகவும் பழைமை வாய்ந்த வைணவத் தலங்களில்  சந்திப்பு   வரதராஜபெருமாள் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

     இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வரதராஜபெருமாள் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில்  எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.  

    இந்த திருத்தேர் 32 அடி உயரமும், 14 அடி அகலமும், 52 தூண்களும் கொண்டது. மொத்தம் 6 சக்கரங்களுடன் 5 அடுக்கு அதிர்ஷ்டானமும், 340 சிற்பங்களும், 4 குதிரைகளும் இதில் உள்ளன. தேர் பவனிக்காக  காலையில்  மலர் அலங்காரத்தில்  சுவாமி தேருக்கு எழுந்தருளினார்.

    தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையத்தை வந்தடைந்தது. தேரை பக்தர்கள் கோவிந்தா... கோபாலா...   கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர்.  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்  செய்திருந்தனர்.

    கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்னர் கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    Next Story
    ×