search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
    X
    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள்-மருமகனுக்கு முன்ஜாமீன்

    நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள், மருமகனுக்கு நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    நில அபகரிப்பு சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன் குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான இந்த வழக்கில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியபட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதால், தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியாவிற்கு 2 வாரங்களில் திங்கட்கிழமை மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


    Next Story
    ×