search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    தமிழக சட்டசபை மீண்டும் ஏப்ரல் 6-ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்

    சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து வரும் 30ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

    தமிழக பட்ஜெட் கூட்டம் கடந்த வாரம் 18-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

    மறுநாள் (19-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு நேற்றுடன் பட்ஜெட் கூட்டம் நிறைவடைந்தது.

    இந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு இன்று கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை மீண்டும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி புதன்கிழமை கூடுகிறது. அன்றைய தினமே மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும்.

    கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? எந்தெந்த துறைகள் மீதான மானிய கோரிக்கை மீதான விவாதத்தை எந்தெந்த நாட்களில் நடத்துவது என்பது பற்றி அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும்.

    இதற்காக அலுவல் ஆய்வு குழு 30-ந்தேதி காலை 11 மணிக்கு எனது தலைமையில் கூடுகிறது. அன்று நடைபெறும் கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றியும் அன்று முடிவு செய்யப்படும்.

    தலைமை செயலகம் அமைந்துள்ள பேரவை கூட்டத்தில்தான் கூட்டம் நடைபெறும். கலைவாணர் அரங்கத்தை விட சிறிய இடம் என்பதால் வசதி குறைவாக இருக்கும்.

    கலைஞரால் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கால் திறக்கப்பட்டது.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த கட்டிடத்தை உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி விட்டு பழைய சட்டமன்றத்திலேயே கூட்டத்தை நடத்தினார். தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதையே கடைபிடித்தார்.

    இப்போதைய முதல்- அமைச்சர் நாம் கட்டிய கட்டிடம் என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வீம்பாக எதையும் செய்யமாட்டார். எதை செய்தாலும் தீர ஆலோசித்துதான் சரியான முடிவை எடுப்பார்.

    நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர் எவ்வித குறையும் இல்லாமல் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் பேசி முடிந்த பிறகு நிதி அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று எடுத்த முடிவின்படி எதிர்க்கட்சி தலைவர் பேசிய பிறகு நிதி அமைச்சர் பதில் உரை அமைந்தது. அவரும் 1½ மணி நேரம் பதில் அளித்தார். அதன் பிறகு முக்கிய அலுவல் காரணமாக என்னிடம் தெரிவித்து விட்டுதான் சென்றார்.

    அவர் சென்று விட்டார் என்பதால் எல்லாம் முடிந்து விட்டது என்பதல்ல. அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்புதான். இந்த காரணத்தை சொல்லி அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்க வேண்டியதில்லை என்பது என்பது கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×