search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்
    X
    ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்

    தமிழகத்தில் கொள்ளை போன 4 பழமையான சிலைகள் மீட்பு

    மீட்கப்பட்டுள்ள 29 சிலைகளும் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    தமிழக கோவில்களில் இருந்து மிக பழமையான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.

    அவ்வாறு கடத்தப்பட்டு ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டிருந்த 29 சிலைகளை அந்த நாட்டு அரசாங்கம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

    பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமரும் காணொலியில் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்டுள்ள 29 சிலைகளும் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், மத்தியபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது.

    அந்த சிலைகளில் 4 சிலைகள் தமிழக கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை.

    இதில் திருஞானசம்பந்தரின் வெண்கல சிலை ஒன்று நடனமாடிய கோலத்திலும், மற்றொரு சிலை நின்ற கோலத்திலும் உள்ளது.

    12-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சிலைகள் மயிலாடுதுறை அருகே சீர்காழி அடுத்துள்ள திருசைக்காடு சுகவனேஸ்வரர் கோவிலைச் சேர்ந்தது. கடந்த 1965-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்டிருக்கிறது.

    63 நாயன்மார்களில் முதன்மையானவராக கருதப்படும் திருஞானசம்பந்தர் சீர்காழி பகுதியில் 6-ம் நூற்றாண்டில் பிறந்தவர் ஆவார்.

    இன்னொரு திருஞான சம்பந்தர் சிலை, சந்தீஸ்வர நாயனார், சிவன் ஆகிய சிலைகள் எந்தெந்த கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை என்ற விபரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். இது தொடர்பாக அறநிலையத்துறையின் ஆவணங்களிலும் தேடி வருகிறார்கள்.

    இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கூறும்போது, இந்த சிலைகள் எப்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இதுவரை வரவில்லை.

    மத்திய அரசு ஒப்படைத்ததும் 4 சிலைகளும் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உரிய கோவில்களுக்கு வழங்கப்படும் என்றார்.

    Next Story
    ×