என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்தல்
    X
    ரேசன் அரிசி கடத்தல்

    ரேசன் அரிசி கடத்திய லாரி பிடிபட்டது

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய லாரியை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது பள்ளத்தூர். இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக்கிடங்கு உள்ளது. இங்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூடைகள் கொண்டு வந்து சேமிக்கப்பட்டு அரிசி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படும்.

    15ஆயிரம் மெட்ரிக்டன் அளவில் நெல் மூடைகள் இங்கு இருப்பு வைக்கப்பட்டிருப்பது வழக்கம். தினமும் 21 ஆயிரம்டன் அளவில் அரிசி ஆலைகளுக்கு அர வைக்கு நெல் கொண்டு செல்லப்படுகிறது.பள்ளத்தூரில் மட்டும் 12தனியார் அரிசி ஆலைகள் அரசின் தானிய கிடங்கிற்கு நெல்லை அரைத்து கொடுக்கும் ஒப்பந்தம் பெற்றுள்ளன. 

    இந்த நிலையில் கடந்த 7ந்தேதி ஊர் பொதுமக்கள் ஒருசில அரிசி ஆலைகளுக்கு ரேசன் அரிசி கடத்தி வந்ததாக 4 வாகனங்களை பஸ்நிலையம் அருகே மடக்கி பிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். மொத்தம் 5 டன் ரேசன் அரிசி மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

    இதேபோல் நேற்றும் கொத்தரி கிராமம் அருகே ஒரு லாரியை பொதுமக்கள் பிடித்து புட்செல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுமார் 16டன் ரேசன் அரிசி மூடைகள் பிடிபட்டது. இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், கிடங்கில் இருந்து பெறப்படும் நெல்லை ஒருசில ஆலைகள் வெளி மார்க் கெட்டில் நல்ல விலைக்கு விற்றுவிடுகின்றன. 

    10டன் நெல் வாங்கினால் அரவைக்குபின் 6.5டன் அரிசி கொடுக்க வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் இருந்து கடத்தி வரப்படும் ரேசன் அரிசியை இங்குள்ள சில மில்முதலாளிகள் குறைந்த விலைக்கு வாங்கி அரசிடம் அரவைக்குப்பின் ஒப்படைப்பதாக கொடுத்து விடுகின்றனர்.

    ஒரு நாளைக்கு சுமார் 100டன்னுக்கும் மேல் ரேசன் அரிசி கடத்தி வரப்படுகிறது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வு துறை காவல் அலுவலகம் சிவகங் கையில் உள்ளது.

    எனவே ரேசன் அரிசியை கடத்துபவர்கள் தைரியமாக கடத்தி வருகின்றனர். அரசு ரேசன் அரிசியை கடத்துபவர்கள், வாங்கி விற்பவர்கள், முறைகேடு செய்யும் ஆலை முதலாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    புட்செல் சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் கூறுகையில், ஒரு சார்புஆய்வாளர், 4காவலர்கள் மட்டுமே உள்ளோம்.அலுவ லகம் சிவகங்கையில் உள்ளதால் சிரமமாக உள்ளது என்றார். 

    நேற்று பிடிபட்ட லாரி நெல் மூடைகளுடன் காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தூர் அருகே வடகுடியில் ஒரு தனியார் குடோனிலும் ரேசன் அரிசி மூடைகள் பிடிபட்டுள்ளன.

    சிவகங்கையில் இருந்து இன்றுதர ஆய்வு செய்யும் நிபுணர்கள் அரிசியை ஆய்வு செய்தபின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
    Next Story
    ×