search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களையும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேங்கடேச பெருமாளையும் படத்தில் காணலாம்.
    X
    கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களையும், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவேங்கடேச பெருமாளையும் படத்தில் காணலாம்.

    உடுமலை ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    கோவிலில் தற்போது கட்டப்பட்டுள்ள 5 நிலை ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
    உடுமலை:

    உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகே செங்குளம் கரைப்பகுதியில் உடுமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த கோவில் வளாகத்தின் நுழைவுப்பகுதியில் தற்போது அழகிய வேலைப்பாடுகளுடன் 69 அடி உயரத்தில்5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது.அத்துடன் கோவில் பகுதியில் தற்போது ஸ்ரீரேணுகாதேவி கோவிலும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவிலின் முன் வாசலில் இரண்டு புறமும் சுழலும் தூண்களும், முன்மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ராஜகோபுரத்திற்கு முன்பு 26அடி உயரம் உள்ள கருடக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலில் தற்போது கட்டப்பட்டுள்ள 5 நிலை ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ ரேணுகாதேவி கோவில் மகாகும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.

    பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை ரக்ஸாபந்தனம், வாஸ்து ஹோமம், சதுஸ்த்தான அர்ச்சனம் ஹோமம், பூர்ணாகுதி, சாத்துமுறைகோஷ்டி, ராஜகோபுர கலச ஸ்தாபனங்கள், மற்றும் ரேணுகாதேவி ஸ்தாபனம் ஜலாதிவாசம் நிகழ்ச்சிகளும், மாலையில் ராஜகோபுரம், பெருமாள் உற்சவ மூர்த்தி மற்றும் ரேணுகாதேவிக்கு 17 கலச ஸ்தாபனம் (திருமஞ்சனம்), உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தன.

    இந்த யாகசாலை பூஜைகளில் பக்தர்கள் திரளாகக்கலந்து கொண்டனர். முன்னதாக யாகசாலைக்கு முன்பகுதியில் வேத பாராயணம் நடந்தது. யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட விழா நிகழ்ச்சிகளை அனைத்து பக்தர்களும் பார்க்கும் வகையில் கோவில் பகுதியில் பெரிய வெண்திரை அமைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

    இன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், சதுஸ்த்தான அர்ச்சனம், ஹோமம் நிகழ்ச்சிகளும், 8.30 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் மஹா பூர்ணாகுதி, கும்ப புறப்பாடு, மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் 24-வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், அஹோபிலமடம் ஆஸ்தான வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர் .பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஆங்காங்கு இடவசதி செய்யப்பட்டு இருந்தது.

    காலை 9மணி முதல் அன்னதானம் நடைபெற்றது. இதற்காக கோவில் பகுதியில் பிரம்மாண்டமான அளவில் 7 அன்னதானக்கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள், திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர். 
    Next Story
    ×