என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம் கமிஷனர் ரவி உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு
சென்னை:
தமிழக காவல்துறையில் 4 போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி.யாக உள்ள அம்ரீஸ் புஜாரி டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நீடிப்பார்.
தாம்பரம் போலீஸ் கமிஷனராக இருக்கும் கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவரும் தற்போது வகிக்கும் பொறுப்பிலேயே நீடிப்பார்.
சிலை தடுப்பு பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் ஜெயந்த் முரளி பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக இருப்பார். டெல்லியில் போலீஸ் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி பிரிவில் பணிபுரியும் கூடுதல் டி.ஜி.பி. கருணாசாகரும் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர்களுக்கு பதவி உயர்வு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.