search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உக்ரைன் - ரஷ்யா போரால் மக்காச்சோளம் விலை உயர்வு

    உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், தற்போது அறுவடை நடந்து வருகிறது.
    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காதது, படைப்புழு தாக்குதல் காரணமாக மகசூல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சாகுபடி பரப்பு குறைந்தது.

    பி.ஏ.பி., அமராவதி பாசனத்திற்கு நீர் திறப்பு, கடந்தாண்டு பெய்த பருவ மழை காரணமாக இறவை மற்றும் மானாவாரி பாசன நிலங்களில் அதிக அளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

    உடுமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், தற்போது அறுவடை நடந்து வருகிறது. கடந்த சில மாதமாக ஒரு குவிண்டால் அதிகப்பட்சமாக ரூ.1,500 முதல் ரூ.1,800  வரை விற்று வந்தது. தமிழகத்திலுள்ள கோழி, மாட்டுத்தீவன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு, வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மக்காச்சோளம் இறக்குமதி செய்யப்படும்.

    தற்போது ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக இறக்குமதி வாய்ப்பு இல்லை என தெரிய வந்ததால், தீவன உற்பத்தி தொழிற்சாலையினர் தங்களுக்கு தேவையான மக்காச்சோளம் கொள்முதல் செய்து இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். இதனால் மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. தற்போது குவிண்டால் ரூ.2,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

    மேலும், உயரும் வாய்ப்புள்ளதால் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில், மக்காச்சோளம் இருப்பும் அதிகரித்துள்ளது. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 10 ஆயிரம் டன் விளை பொருட்கள் இருப்பு வைக்கும் வசதி உள்ளது. தற்போது  விவசாயிகள் விலையை எதிர்பார்த்து 2 ஆயிரம் டன் மக்காச்சோளம் இருப்பு வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    மக்காச்சோளம் இறக்குமதி வாய்ப்பு இல்லாததால், உள்ளூர் சந்தையில் விலை ஏறி வருகிறது. உடுமலை பகுதிகளில் அறுவடை சீசன் தீவிரமடைந்து வரத்து அதிகரித்துள்ள நிலையிலும்  விலை உயர்ந்து வருகிறது.

    குவிண்டால், ரூ.2,200 வரை விற்று வருகிறது. மேலும்  விலை உயரும் வாய்ப்புள்ளது. அதனால் விலையை எதிர்பார்த்து விவசாயிகள் இருப்பு வைக்கத் துவங்கியுள்ளனர். விவசாயிகள் இருப்பு வைக்க தேவையான குடோன் வசதி மற்றும் பெருளீட்டுக்கடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×