search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    கடலூர் மாநகராட்சி விடுதலை சிறுத்தைக்கு மேயர் பதவி கிடைக்குமா?- திருமாவளவன் பேட்டி

    தமிழக அரசியலில் தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களை தாங்களே மாற்று சக்தியாக அறிவித்து கொண்டனர்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

    கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெற்றது குறித்து...

    பதில்: நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. 8 மாத கால தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்த நன்மதிப்பும், தி.மு.க. கூட்டணி மீதான நம்பகத் தன்மையும் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

    தேர்தலை மிக நேர்மையாகவும், அமைதியாகவும் தி.மு.க. அரசு நடத்தி முடித்துள்ளது. எந்த இடத்திலும் ஆளும் கட்சி தரப்பில் இருந்தோ அல்லது கூட்டணி தரப்பில் இருந்தோ அத்துமீறல் நடைபெறவில்லை.

    சுயேட்சைகள் வெற்றி பெற்றாலும், உடனுக்குடன் அறிவிக்கக்கூடிய அளவிற்கு ஆளும்கட்சி தலையீடு இல்லாத தேர்தலாக இது அமைந்தது.

    அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தேர்தல் குறித்த எந்த புகாரையும் சொல்ல முடியவில்லை. தமிழக முதல்வரின் இத்தகைய அணுகுமுறையும் இந்த வெற்றிக்கு ஒரு காரணமாகும்.

    கே: நகர்ப்புற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளின் வெற்றி வாய்ப்பு குறித்து உங்களின் கருத்து என்ன?

    அதிமுக

    ப: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 60 சதவீதம் வெற்றிபெற்றுள்ளது. மாநகராட்சியில் 28 இடங்களும், நகராட்சியில் 36 இடங்களும், பேரூராட்சியில் 70 வார்டுகளிலும் வெற்றி பெற்று இருக்கிறோம்.

    விடுதலை சிறுத்தைகள் பல்வேறு தடைகளை தாண்டி இந்த வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    தேர்தலுக்கு தேர்தல் நாங்கள் புதிய சின்னங்களில் போட்டியிட்டாலும், அந்த சின்னத்தை தேடி பிடித்து வாக்களித்து மக்கள் எங்களை அங்கீகரித்து இருக்கிறார்கள்.

    சட்டசபை தேர்தலில் பானை சின்னத்திலும், உள்ளாட்சி தேர்தலில் தென்னைமர சின்னத்திலும் போட்டியிட்டோம். சுயேட்சை சின்னங்களில் நாங்கள் போட்டியிட்டாலும் 60 சதவீதம் வெற்றியை மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.

    இது விடுதலை சிறுத்தை தி.மு.க. கூட்டணியிலும், கட்சி சாராத பொதுமக்கள் இடையேயும் கிடைத்துள்ள நன்மதிப்பாக கருதுகிறோம். தனி வார்டுகள் தவிர பொது இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

    கே: மேயர், துணை மேயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?

    ப: முதல்- அமைச்சரை சந்தித்து கோரிக்கை பட்டியலை வழங்கி உள்ளோம். பொது தொகுதியான கடலூரில் ஒரு மேயரை ஒதுக்கவேண்டும் என்றும், கடலூர், ஆவடி, திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட 9 துணை மேயர் பதவிகளும் கேட்டுள்ளோம்.

    இது மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கான பட்டியலும் வழங்கி இருக்கிறோம். முதல்-அமைச்சர் இதனை பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்.

    கே: நகர்ப்புற தேர்தலில் பா.ஜ.க. அதிக ஓட்டுகள் பெற்று வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறுகிறார்களே?

    ப: பா.ஜ.க. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அரை சதவீதம் வாக்கு குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதாவது ஆதரவு சரிந்துள்ளது என்பது உண்மை. அ.தி.மு.க.வைவிட பா.ஜ.க. சில இடங்களில் கூடுதல் வாக்குகள் பெற்றதாக தப்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

    அது அ.தி.மு.க.வை சிறுமைப்படுத்துவதாகும். பா.ஜ.க. 100-க்கு மேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்துள்ளன. அதேபோல 100-க்கு மேற்பட்ட இடங்களில் வாக்குகளை பெற்றுள்ளன.

    கன்னியாகுமரியை தவிர வேறு எங்கும் அவர்களுடைய ‘இருப்பு’ உள்ளதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கவில்லை.

    கே: இத்தேர்தலில் தனித்து நின்ற கட்சிகள் செல்வாக்கை இழந்துள்ளது பற்றி...

    ப: தமிழக அரசியலில் தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தங்களை தாங்களே மாற்று சக்தியாக அறிவித்து கொண்டனர். ஆனால் தி.மு.க. கூட்டணியை தமிழக மக்களுக்கான நம்பிக்கைக்குரிய அரசியல் சக்தி என்பதை மீண்டும் மீண்டும் நிறுவி வருகின்றனர்.

    பாராளுமன்றம், சட்டசபை, கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் மாபெரும் வெற்றியை வழங்கி வந்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைக்கு எதிராக பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் எதிரான அவதூறுகளை பரப்பினாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. நாங்கள் கொள்கை சார்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட சாதீய சக்திகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அதனால் எங்கள் மீது அவர்கள் அபாண்ட அவதூறு பரப்பி பொது நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    ஆனால் அதை மக்கள் ஏற்கவில்லை. எங்களை மக்கள் அங்கீகரித்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கான வெகுமக்கள் இயக்கமாக விடுதலை சிறுத்தையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... கார் மீது ஏறிய ரஷிய ராணுவ டாங்கி- வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு

    Next Story
    ×