search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
    X
    அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

    விவசாய சங்கங்கள், வேளாண்துறையினருடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை

    நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    சென்னை:

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வேளாண் துறையை சார்ந்த பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள், கால்நடை மற்றும் பால்வளத்துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டார்.

    2022-23-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் அதனை தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையின் போது வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் அமைக்கப்பட்டது.

    அதேபோல வருகின்ற மார்ச் மாதம் வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வேளாண் துறை சார்ந்த பிரதிநிதிகளுடனும், விவசாய சங்க நிர்வாகிகள், பால்வளத்துறை மற்றும் கால்நடை துறை சார்ந்த தொழில் அதிபர்கள், சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை மேற்கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.

    சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனையில், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×