search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை ராமாமிர்தம் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.
    X
    செங்கோட்டை ராமாமிர்தம் பள்ளி வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை பணிகள் தயார்

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாளை வாக்குகள் எண்ணப்படுகிறது. அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
    தென்காசி:

    தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரபரப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    தென்காசி மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி கடையநல்லூர் நகராட்சியின் வாக்கு எண்ணிக்கை அங்குள்ள விஸ்டம் மெட்ரிக்பள்ளி, புளியங்குடி நகராட்சி, ராயகிரி, சிவகிரி, வாசுதேவநல்லூர் பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை புளியங்குடி வீராசாமி செட்டியார் கல்லூரியிலும் நடைபெறுகிறது.

    சங்கரன்கோவில் நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை கோமதி அம்மாள் மெட்ரிக்பள்ளியிலும், செங்கோட்டை நகராட்சி, அச்சன்புதூர், குற்றாலம், இலஞ்சி, மேலகரம், பண்பொழி பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை செங்கோட்டை ராமாமிர்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

    தென்காசி, சுரண்டை நகராட்சிகள், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை பேரூராட்சியின் வாக்கு எண்ணிக்கை தென்காசி ஐ.சி.ஐ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, கீழப்பாவூர், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை அத்தியூத்து சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது.

    நாளை வாக்கு எண்ணிக்கையையொட்டி அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் மேஜைகள் போடப்பட்டு தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கு வார்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து மேஜைகள் போடப்பட்டுள்ளது.

    முன்னதாக ஏஜெண்டுகள் அடையாள அட்டை கொண்டு செல்லவும், செல்போன் கொண்டு செல்ல கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உள்ளே செல்வதற்கும், அதிகாரிகள் உள்ளே செல்வதற்கும் தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளது.ஏஜெண்டுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    கூட்ட நெரிசலை தவிர்க்க கம்புகள் கட்டப்பட்டு உள்ளது. அனைவருக்கும் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஏஜெண்டுகள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியிலும், கோவில்பட்டி நகராட்சியின் வாக்குகள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், காயல்பட்டினம், திருச்செந்தூர் நகராட்சிகள், ஆறுமுகநேரி, கானம், ஆத்தூர் பேரூராட்சிகளின் வாக்குகள் வீரபாண்டியன்பட்டினம் தூய தாமஸ் மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

    ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலைப்பள்ளியிலும், நாசரேத், உடன்குடி, சாத்தான் குளம் பேரூராட்சிகளின் வாக்குகள் நாசரேத் செயின்ட் மேரீஸ் நடுநிலைப்பள்ளியிலும் எண்ணப்படுகிறது.

    மேலும் ஏரல், பெருங்குளம், சாயர்புரம், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிகளின் வாக்குகள் சாயர்புரம் போப் கல்லூரியிலும், எட்டயபுரம், விளாத்திகுளம், வி.புதூர் பேரூராட்சிகளின் வாக்கு பெட்டிகள் எட்டயபுரம் பாரதி யார் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், கயத்தாறு பேரூராட்சி வாக்குகள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் வைத்து எண்ணப்படுகிறது.

    கழுகுமலை பேரூராட்சியில் பதிவான வாக்குகள் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து எண்ணப்படுகிறது. இந்த 9 மையங்களிலும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாக்கு எண்ணிக் கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் சி.சி.டி.வி. காமிராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஏஜெண்டுகள், வேட்பாளர்களுக்கான விதி முறைகள், தபால் ஓட்டுக்கான மேஜைகள் மற்றும் அவற்றை எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என அனைத்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    Next Story
    ×