search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி.
    X
    நாகர்கோவிலில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்த காட்சி.

    அ.தி.மு.க - பாரதிய ஜனதாவுக்கு மு.க. ஸ்டாலின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்: உதயநிதி ஸ்டாலின்

    தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பா.ஜ.கவால் கால் வைக்க முடியாது என நாகர்கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
    நாகர்கோவில்:

    உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி. மு.க. வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் சிறப்பாக வாக்களித்து மதசார்பற்ற கூட்டணிக்கு வெற்றியை கொடுத்தது போல உள்ளாட்சியிலும் வெற்றியை கொடுக்க மக்கள் காத்திருக்கிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்தேன், 40-ல் 39 தொகுதிகளில் வெற்றிபெற செய்தீர்கள். அதுபோல சட்டமன்றத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். ஆட்சி அமைத்து 8 மாதம் ஆனதை நினைவுபடுத்தத்தான் வந்திருக்கிறேன். மே மாதம் தலைவர் ஸ்டாலினை முதல்- அமைச்சர் ஆக்கினீர்கள். அப்போது கொரோனா இரண்டவது அலையால் ஆபத்தான நிலை இருந்தது. ஆஸ்பத்திரியில் இடம் இல்லை, பெட் இல்லை, ஆக்ஸிஜன், மருந்து இல்லாத நிலை இருந்தது.

    கொரோனா முதல் அலையின்போது அ.தி. மு.க ஆட்சியில் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை. அப்போது ஒரு கோடி பேர் மட்டுமே ஊசி போட்டிருந்தார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் பத்து கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால்தான் மூன்றாவது அலையை எளிதாக கடந்து வந்துவிட்டோம். இந்தியாவிலேயே கொரோனா வார்டுக்கு சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் நம் தலைவர் ஸ்டாலின் தான். இந்தியாவில் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரை மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். அந்த அளவுக்கு அல்லும் பகலுமாக உழைத்து வருகிறார். அவரது சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலில் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசினார். கடந்த இரண்டு நாட்களாக பிரசாரத்தில் என்னைப்பற்றி பேசுகிறார். தலைவரை விட்டுவிட்டு என்னை பிடித்துக்கொண்டார். பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு போய்விட்டார் என என்னை தேடிக்கொண்டு இருக்கிறார். என்னை வீட்டில் கூட தேடமாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தேடி வருகிறார்.

    ஆனால், நான் ஊர் ஊராக பிரசாரம் செய்துவருகிறேன். நீட் மசோதா தொடர்பான சிறப்பு சட்டசபை கூட்டம் நடந்தபோது நான் அவருக்கு முன்னால்தான் இருந்தேன். எடப்பாடி பழனிசாமி டேபிளுக்கு மேல் பார்த்தால்தான் தெரியும். அவர் டேபிளுக்கு கீழே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி தெரியும்.

    அ.தி.மு.க ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு போயிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு கொரோனாவில் மூன்று மாதம் போய்விட்டது. அதன் பிறகு 5 மாத காலங்களில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் இரண்டு தவணையாக கொடுத்திருக்கிறோம். பெண்களுக்கு இலவச பஸ் வசதி, ஆவின், பெட்ரோல் மூன்று ரூபாய் குறைத்திருக்கிறோம். மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மகளிர் சுய உதவிகுழுவின் அனைத்து கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் உரிமைத் தொகை 1000 ரூபாய் விரைவில் கொடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் கடந்த 5 நாட்களாக பிரசாரத்தில் இருக்கிறேன். இங்கு ஆண்களை விட அதிகமாக தாய்மார்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பெண்கள் முடிவெடுத்து, இந்த ஆட்சியின் சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

    ராகுல் காந்தி ஐந்து நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மோடியை பார்த்து சவால் விட்டார். தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பா.ஜ.கவால் கால் வைக்க முடியாது. தமிழகத்தை பார்த்தாவது திருந்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

    பா.ஜ.க. வுக்கும், அ.தி. மு.க.வுக்கும் சிம்ம சொப்பனமாக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். மாநில உரிமை பறிக்கப்படும்போதெல்லாம் அவர்தான் குரல்கொடுத்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக நாகர்கோவில் புறக்கணிக்கப்படுள்ளது. நாங்கள் 8 மாதங்களில் சாலைகளை சீரமைக்க 26 கோடி ஒதுக்கி உள்ளோம். 4 மாதத்தில் இல்லம்தோறும் குடிநீர் வழங்கப்படும். மாநகர பகுதியில் உள்ள உரக்கிடங்கை, மாநகருக்கு வெளியே மாற்ற டெண்டர் விடப்பட்டுள்ளது. 2016ல் தி.மு.க ஆட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சியில் அது நிறைவேற்றப்படவில்லை. இன்னும் ஆறு மாதத்தில் கண்டிப்பாக இந்த வேலைகள் செய்து தரப்படும். எனவே வரும் நாட்களில் நீங்கள் இந்த பிரசாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தலைவர் அறிவித்த வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என உங்கள் வீட்டுப்பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார் .


    Next Story
    ×