என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்தையில் விற்பனையாகாமல் தேங்கிய தக்காளி
    X
    சந்தையில் விற்பனையாகாமல் தேங்கிய தக்காளி

    அய்யலூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

    அய்யலூரில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்
    வடமதுரை:

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. தொடர்மழை காரணமாக தக்காளி செடி அழுகியதும், வெளியூர் வரத்து குறைந்ததும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி விதைகளை நடவு செய்வதில் ஆர்வம் காட்டினர். வடமதுரை, அய்யலூர், எரியோடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நடவு செய்த தக்காளி தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இவை அய்யலூர் மற்றும் ஒட்டன்சத்திரம் மார்க் கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலையில் கொட்டிச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல அய்யலூர் சந்தையில் தினந்தோறும் 10 முதல் 15 டன் வரை தக்காளி கொண்டுவரப்படும். இவை உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வாங்கிச் செல்லப்படும்.

    கடந்த மாதம் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. ஆனால் தற்போது 1 பெட்டி ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருசிலர் தக்காளியை வேன்களில் கொண்டு சென்று கிராமங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    வெளியூர் வியாபாரிகள் வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் தினசரி 5 டன் வரை தக்காளி விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே போதிய விலை கிடைக்காத காலங்களில் தக்காளியை பதப்படுத்தி சேமித்து வைக்க அரசு உரிய ஏற்பாடு செய்து தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×