search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமல்ஹாசன் - சீமான்
    X
    கமல்ஹாசன் - சீமான்

    3வது இடம் யாருக்கு?- கமல், சீமான் கட்சிகள் பலப்பரீட்சை

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தற்போதைய சூழ்நிலையில் 3-வது இடத்தை பெற சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையேதான் போட்டி ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இதில் முதலிடம் எந்த கட்சிக்கு கிடைக்கும். 2-வது இடம் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

    3-வது இடம் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதில்தான் வாக்காளர்கள் மத்தியில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர தேர்தல் களத்தில் பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், பாரதிய ஜனதா, நாம் தமிழர், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வட மாவட்டங்களிலும், மத்திய மாவட்டங்களிலும் மட்டுமே கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் பா.ம.க.வுக்கு வாக்குகள் அதிகம் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே ஒட்டுமொத்தத்தில் 3-வது இடத்தை பா.ம.க.வால் பெற முடியுமா என்பது சந்தேகமே.

    விஜயகாந்தின் தே.மு.தி.க. 2005-ல் தொடங்கப்பட்டபோது தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக கருதப்பட்டது. இதுவரை அந்த கட்சி 7 தேர்தலை சந்தித்து உள்ளது. 2006-ல் 8.36 சதவீதம், 2009-ல் 10.3 சதவீதம், 2011 தேர்தலில் 7.9 சதவீத வாக்குகளை பெற்று அந்த கட்சி பிரமிக்க வைத்தது.

    ஆனால் அ.தி.மு.க.வுடன் மோதல் ஏற்பட்ட பிறகு 2014-ல் 5.1 சதவீதம், 2016-ல் 2.4 சதவீதம், 2019-ல் 2.19 சதவீதம் வாக்குகளையே அந்த கட்சியால் பெற முடிந்தது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மிக மோசமான தோல்வியை தே.மு.தி.க. தழுவியது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. 3-வது இடத்துக்கு வர வாய்ப்பே இல்லை என்று தான் கருதப்படுகிறது.

    பா.ஜனதா, அ.ம.மு.க. கட்சிகளுக்கும் அனைத்து வார்டுகளிலும் செல்வாக்கு இல்லாத நிலை உள்ளது. எனவே இந்த கட்சிகளும் 3-வது இடத்துக்கு வர வாய்ப்பு குறைவு.

    எனவே தற்போதைய சூழ்நிலையில் 3-வது இடத்தை பெற சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் இடையேதான் போட்டி ஏற்பட்டுள்ளது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016-ம் ஆண்டு முதன் முதலில் தேர்தலை எதிர்கொண்டது. முதல் தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளுடன் 9-வது இடத்தை இந்த கட்சி பெற்றது.

    ஆனால் 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது
    நாம் தமிழர் கட்சி
    வேட்பாளர் 2.15 சதவீத வாக்குகள் பெற்று 4-வது இடத்துக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது அந்த கட்சியின் வாக்கு வங்கி சதவீதம் 3.15 சதவீதமாக அதிகரித்தது.

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு 6.72 சதவீதம் வாக்குகள் கிடைத்தது. தமிழகம் முழுவதும் 31 லட்சம் வாக்குகளை அந்த கட்சி பெற்று பிரமிக்க வைத்தது. என்றாலும் 2021-ம் ஆண்டு இறுதியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அந்த கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

    இந்த தடவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் நாம் தமிழர் கட்சி களம் இறங்கி உள்ளது. சாமானிய மக்களை வேட்பாளர்களாக அறிவித்து உள்ளது. எனவே அதிக வெற்றி பெற்று 3-வது இடத்தை பெற முடியும் என்று
    நாம் தமிழர் கட்சி
    நிர்வாகிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி தான் தொடங்கப்பட்டது. 4 ஆண்டுகளே ஆகி இருக்கும் இந்த கட்சி இதுவரை 2 பெரிய தேர்தலை சந்தித்து உள்ளது. 2019-ம் ஆண்டு எம்.பி. தேர்தலின்போது கமல் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்தார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

    அதுபோல கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் கமல் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மொத்தம் 2.62 சதவீத வாக்குகளையே கமல் கட்சியால் பெற முடிந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 12 லட்சம் பேர்தான் அவர் கட்சிக்கு வாக்கு அளித்து இருந்தனர்.

    கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சிக்கு 3 ஊராட்சி வார்டுகளில் மட்டுமே வெற்றி கிடைத்து இருந்தது. இது மிகப்பெரிய ஏமாற்றமாக அந்த கட்சி நிர்வாகிகளுக்கு இருந்தது.

    என்றாலும் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு வார்டுகளில் கமல் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் பேட்டி அளித்த அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “கிராமங்களில் நாங்கள் இன்னும் வலுவாகவில்லை. நகர்ப்புறங்களில் வலுவாக இருக்கிறோம். குறிப்பாக நகராட்சி, பேரூராட்சிகளில் கமல் கட்சிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது” என்று கூறினார்.

    அவரது இந்த கருத்தின் அடிப்படையில் பார்த்தால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைக்க வேண்டும். ஆனால் அது 3-வது இடத்தை பெற்று தருமா என்பது உறுதியாக சொல்ல முடியாதபடி உள்ளது.

    பிப்ரவரி 22-ந் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவுகள் இருக்குமா என்பது அப்போது தெரிந்து விடும்.



    Next Story
    ×