என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்- ஈரோட்டில் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்திய 19 பேர் கைது
ஈரோடு:
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.
எனவே தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்தும். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கவர்னர் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னீர் செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாக்குபை, தண்ணீர் குடம் ஆகியவற்றுடன் தயாராக இருந்தனர்.
இதை அறிந்த தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கவர்னரின் உருவப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட 19 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.






