search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கட்டிட வசதியின்றி தவிக்கும் கிராமப்புற தபால் ஊழியர்கள்

    கிராமப்புற தபால் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இட நெருக்கடிக்கு இடையே பணியாற்ற வேண்டியுள்ளது.
    அவிநாசி:

    திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு கிராமப்புறங்களில் செயல்படும் தபால் நிலையங்களுக்கென சொந்த கட்டிடம் இல்லை. 30,40 ஆண்டுகள் முன்அந்தந்த ஊர் மக்கள் சார்பில் பொதுவான கட்டிடங்கள், தபால் நிலைய பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன.

    ஆரம்ப நாட்களில் கடிதம் அனுப்புவது, பதிவு தபால் அனுப்புவது, சேமிப்பு கணக்கு துவங்குவது உள்ளிட்ட சில பணிகள் மட்டும் நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து கிராமப்புற தபால் நிலையங்களிலும் அனைத்து தபால் சேவைகளும் வழங்கப்படுகின்றன. பணிகள் டிஜிட்டல் மயமாகியுள்ளன.

    தபால் பட்டுவாடா மட்டுமின்றி சேமிப்பு கணக்கு கையாள்வது, செல்வமகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டம் என தபால் துறை சார்ந்த அனைத்து சேவைகளிலும் கிராமப்புற மக்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இதனால் தபால் அலுவலகத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

    பெரும்பாலான கிராமப்புற தபால் நிலையங்கள் பழமையானதாக இருப்பதால் அவற்றின் கூரை பெயர்ந்தும், சுவர்கள் பழுதாகியும் உள்ளன. இடநெருக்கடியாக உள்ளது. மழையின் போது மழைநீர் ஒழுகுவதும் உண்டு.

    தபால் நிலையங்களுக்கு மாற்றிடம் ஏற்படுத்தி தரவோ, தற்போதுள்ள கட்டிடத்தை பராமரிக்கவோ, புதுப்பிக்கவோ, தபால் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு இல்லை. மாறாக அந்தந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமே மாற்று கட்டிடம் ஏற்பாடு செய்வது, பராமரிப்பு அல்லது புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தபால் துறை கைவிரித்து விடுகிறது.

    இதனால் கிராமப்புற தபால் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இட நெருக்கடிக்கு இடையே பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே  மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு கிராமப்புற தபால் நிலையங்களுக்கு கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×