search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    பல்லடத்தில் விசைத்தறிகள் இயங்காமல் உள்ளதை படத்தில் காணலாம்.

    விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு - நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

    கூலி உயர்வை அமல் படுத்தக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. 

    இந்தநிலையில் கூலி உயர்வை அமல் படுத்தக்கோரி கடந்த 9-ந்தேதி முதல் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 11-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதனால் காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்தால் சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கூறும்போது, இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை ரூ.1000 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.  

    அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம் மற்ற ரகத்திற்கு 20 சதவீதம் என கூலி உயர்வு அறிவித்துவிட்டு தற்போது ஜவுளி உற்பத்தியாளர்கள் 10 சதவீதம் தருகிறோம், 12 சதவீதம் தருகிறோம் என கூறுவது நியாயமில்லை.

    நாளை 20-ந்தேதி (வியாழக் கிழமை) கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துள்ளனர். இதில் ஜவுளி உற்பத்தியாளர்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து புதிய ஒப்பந்த கூலியை பெறும் வரையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என்றனர்.
    Next Story
    ×