என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மத்திய மந்திரி அமித்ஷா
  X
  மத்திய மந்திரி அமித்ஷா

  மத்திய மந்திரி அமித்ஷாவுடன் நீட் தேர்வு விலக்கினை வலியுறுத்தி மனு - தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகின்றனர்.
  சென்னை:

  மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த அ.தி.மு.க. அரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசிடமும் நேரில் முறையிட்டது. ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது, ‘‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்டது.

  தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு சட்ட சபையில் 19.9.2021 அன்று நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

  இந்த மசோதா உடனடியாக கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகும் அந்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

  இந்த நிலையில் கடந்த 28.12.2021 அன்று நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள், ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு சென்று, நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும், இந்த சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படக் கூடிய காலதாமதம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கக் கூடிய மனு ஒன்றையும் அளித்தனர்.

  அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் நேரம் கேட்டனர். ஆனால் அவர்களை உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்து வந்தார். 3 முறை உள்துறை மந்திரியை சந்திக்க முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டது.

  இந்த சூழலில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீட் விலக்கு சட்ட மசோதாவின் நிலை குறித்து கவர்னர் மாளிகையில் தகவல் கேட்டு இருந்தார். அதற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் சட்டமசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளது என்று, கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  நீட் தேர்வு

  ஆனாலும் இதுவரை அந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை.

  இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கோட்டையில் கடந்த 8-ந்தேதி அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவது என்றும், சட்ட ரீதியாக இதை அணுகுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

  இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அமித்ஷா அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவை தொடர்பு கொண்ட அதிகாரிகள், 17-ந் தேதி மாலை 4.30 மணிக்கு உங்களை சந்திக்க உள்துறை மந்திரி நேரம் ஒதுக்கித் தந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

  அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு டி.ஆர்.பாலு தலைமையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகின்றனர்.

  இதற்காக தமிழக எம்.பி.க்கள் இன்று காலையில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் அ.தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அமித்ஷாவை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும், அதை உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளனர்.

  Next Story
  ×