search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு மார்க்கெட்
    X
    கோயம்பேடு மார்க்கெட்

    கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு விலை குறைந்தது

    கொரோனா பரவல் அச்சம் காரணமாக சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது.
    போரூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்கெட்டுக்கு விழுப்புரம், கடலூர், சேலம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த 11ந் தேதி முதல் 3 நாட்களாக இதுவரை 700 க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு விற்பனைக்கு குவிந்துள்ளது.

    இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திரா மாநிலம் கடப்பா ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மஞ்சள் கொத்துகளும் அதேபோல் கும்பகோணம் பகுதியில் இருந்து இஞ்சி கொத்துகளும் விற்பனைக்கு வந்துள்ளது.

    கரும்பு விலை இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று ஒரு கட்டு கரும்பு ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மஞ்சள் கொத்து உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சந்தைக்கு வரும் மஞ்சள் கொத்து வரத்து பாதியாக குறைந்துவிட்டது நேற்று ரூ.80க்கு விற்கப்பட்ட ஒரு கட்டு மஞ்சள் கொத்து இன்று ரூ.50-க்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

    விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை மிகவும் மந்தமாகவே நடைபெற்று வருவதால் வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கரும்பு மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, கரும்பு விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கடந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு ரூ.600 வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் விலை மூன்றில் ஒரு பங்காக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்து விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்.
    Next Story
    ×