என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒமைக்ரான்
கடுமையாக தாக்கும் ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்காதீர்கள் - மத்திய அரசு திடீர் எச்சரிக்கை
தடுப்பூசி செலுத்தாதவர்களை ஒமைக்ரான் கடுமையாக தாக்கும். முழுமையான தடுப்பூசியின் மூலமே இதில் இருந்து பாதுகாக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் காரணமாக தற்போது கொரோனா அதிகரித்து 3-வது அலையில் புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் பாதிப்பு 5,448 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,162 பேர் குணமடைந்துள்ளனர். 3,326 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே ஒமைக்ரான் பாதிப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்படும் என்றும், 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஏற்படுவது தெரியாது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய தொற்று நோயியல் இயக்குனர் டாக்டர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார். இந்த நோய் தொற்று சளி போன்று லேசானது என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்கக் கூடாது என்று மத்திய அரசு திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நிதி அயோக்கின் சுகாதார அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் கூறியதாவது:-
19 மாநிலங்களில் கொரோனாவின் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 6 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 300 மாவட்டங்களில் வார பாதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒமைக்ரானை சாதாரண ஜலதோஷமாக நினைக்கக் கூடாது. இதை மிகவும் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தீவிரமாக கண்காணிப்பது அவசியமாகும். ஒமைக்ரானின் மாறுபாடு தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களை இது கடுமையாக தாக்கும். முழுமையான தடுப்பூசியின் மூலமே இதில் இருந்து பாதுகாக்க முடியும். நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். தடுப்பூசி போட வேண்டும்.

மேலும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி ஒரு முக்கிய தூணாக உள்ளது. ஒமைக்ரான் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் அகர்வால் கூறும்போது, ‘‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு 90.2 சதவீதம் முதல் 95.7 சதவீதம் வரை குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்றார்.
இந்தநிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி போடாதவர்களுக்கு ஒமைக்ரானால் மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்...சிறுமியை பலாத்காரம் செய்து சாலையில் வீசிய கொடூரம்- ராஜஸ்தானில் அதிர்ச்சி
Next Story