search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - பிரதமர் மோடி இன்று காணொலி காட்சியில் திறந்துவைக்கிறார்

    தற்போது இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதால் கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.
    சென்னை:

    தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், புதிதாக 11 மாவட்டங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.

    அதன்படி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும்.

    ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி விருதுநகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் நேரில் பங்கேற்று தொடங்கி வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது.

    பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி, தமிழக பா.ஜ.க.வினரும் மதுரையில் பொங்கல் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    கொரோனா பரவல் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில், குறிப்பிட்ட நாளில் டெல்லியில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அவர் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரி கட்டிடங்களையும் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். மேலும், மத்திய அரசு நிறுவனமான செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மைய வளாக கட்டிடத்தையும் அவர் திறந்துவைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கிறார்.

    Next Story
    ×