search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுதானிய பயிர் சாகுபடி - தயக்கம் காட்டும் அவிநாசி விவசாயிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் ராகி, சாமை, தினை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தி மேற்கொள்வதற்குரிய காலநிலை உள்ளது.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டத்தில் 1.40 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சோளம், கம்பு, ராகி, தினை உள்ளிட்ட சிறுதானிய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் உடுமலை பகுதியில் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே ராகி, தினை, சாமை உள்ளிட்ட தானிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

    அவிநாசி, சேவூர், கருவலூர் உட்பட தாலுகாவில் சோளம் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது. அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் சிறுதானிய பயிரை அதிக அளவில் சாகுபடி செய்ய வேண்டும் என வேளாண் துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    ஆனால் விவசாயிகள் மத்தியில் தயக்கம் நீடிக்கிறது. சோளம் பயிரிடுவதன் மூலம் கிடைக்கும் தட்டு, கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது. ஆனால் சிறுதானிய பயிரில் தட்டு கிடைக்காது என்பதால் தான், விவசாயிகள் சோளப்பயிர் சாகுபடியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். இதனால் மற்ற பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சி எடுப்பதில்லை.

    இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் கூறியதாவது:

    அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளிலும் ராகி, சாமை, தினை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தி மேற்கொள்வதற்குரிய காலநிலை உள்ளது. சில இடங்களில் விவசாயிகள் பயிரிட்டாலும் பெரும் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் தான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    சிறு தானியங்களை பொடியாக்கி அதன் மூலம் சத்து நிறைந்த பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட ஆங்காங்கே உருவாகி வருகின்றன. எனவே விளைவிக்கப்படும் சிறுதானியங்களை அந்நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

    உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக சிறுதானியங்கள் உள்ளதால் அவற்றின் சாகுபடி பரப்பை அதிகப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் பாரம்பரியம் மிக்க கருங்குறுவை நெல் சாகுபடி செய்யும் முயற்சியில் பல்லடம் விவசாயி ஒருவர் ஈடுபட்டுள்ளார். பல்லடம் அருகே கிடாத்துறை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இயற்கை விவசாயி. பாரம்பரியம் மிக்க கருங்குறுவை நெல் சாகுபடி செய்வதற்காக நாற்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    இயற்கை உரம், பூச்சி விரட்டிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறேன். டெல்டா மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கேயும் அதுபோல் முயற்சி செய்ய எண்ணினேன். அதன்படி விவசாயம் சார்ந்த பல்வேறு வல்லுனர்களுடன் ஆலோசித்து பாரம்பரியம் மிக்க கருங்குறுவை நெல் சாகுபடி செய்ய தீர்மானித்தேன். 

    கடந்த 3 மாதங்களாக வயலை தயார்படுத்தி தற்போது நாற்று நடும் பணியை மேற்கொண்டுள்ளேன். தொழிலாளர், தண்ணீர் பற்றாக்குறை, வேலை பளு உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்வதில்லை. 

    இவற்றை பொருட்படுத்தாமல் வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து பணிகள் மேற்கொண்டுள்ளேன். கடந்த 20 ஆண்டுக்கு முன் நெல் பயிரிட்டேன். தற்போது மீண்டும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன். நிச்சயம் இதில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×