என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பின்னலாடை தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு வழிகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் - ஏற்றுமதியாளர் சங்க தலைவர் அறிவுறுத்தல்

    உலக அளவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருகிறது. இதுவரை சரக்கு போக்குவரத்து உட்பட எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
    திருப்பூர்:

    கொரோனா இரண்டு அலைகளால் இந்தியா உட்பட உலகளாவிய நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் பெரும் சரிவை சந்தித்தது. கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு கடந்த ஆகஸ்டு முதல் திருப்பூர் ஏற்றுமதி துறை எழுச்சி பெற்றுவருகிறது.

    பல்வேறு நாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கு அதிக அளவு ஆர்டர்கள் வரத்துவங்கின. நடப்பு நிதியாண்டில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.32 ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்துவிடும் என்கிற நம்பிக்கை திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில் பிறந்தது.

    தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவத்துவங்கியுள்ளது. இதனால் 3-வது அலை உருவாகலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனால் ஏற்றுமதி பாதிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:

    உலக அளவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை சரக்கு போக்குவரத்து உட்பட எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. உற்பத்தி செய்த ஆடைகள், வெளிநாடுகளுக்கு தடையின்றி அனுப்பப்பட்டு வருகின்றன.

    ஒமைக்ரானால் வர்த்தகம் மீண்டும் பாதிக்கப்படுமோ என்கிற குழப்பமான மனநிலையே ஏற்றுமதியாளர்களை சூழ்ந்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப்பின் 10-ந் தேதி, வெளிநாட்டு வர்த்தகர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவர். 

    அதன்பின்னரே புதிய ஆர்டர் வருகை எப்படியிருக்கும் என தெரியவரும். அனைத்து நாடுகளிலும் கொரோனா குறித்த புரிதல் உள்ளது. தடுப்பூசிகளும் பயன்பாட்டில் உள்ளன. மீண்டும் ஊரடங்கு வந்தால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். 

    எனவே கட்டுப்பாடுகளுடன் தொழில், வர்த்தகம் தடையின்றி நடைபெற செய்யவே உலகளாவிய நாடுகள் முயற்சிக்கும்.

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். 

    அனைவரும் ஒன்றுபட்டு ஒமைக்ரானை பரவவிடாமல் தடுத்து விரட்டியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×