search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சசிகலா
    X
    சசிகலா

    கரும்புகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- சசிகலா கோரிக்கை

    விவசாயிகள் ஏற்கனவே மழை, வெள்ளம் மற்றும் இடுபொருள்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் இந்த கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கரும்பு விவசாயிகளிடம் இருந்து, பொங்கல் சிறப்பு தொகுப்பாக, செங்கரும்பு கொள்முதல் செய்வதில், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், விவசாயிகளிடம் தமிழக அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து, சேர வேண்டிய தொகையையும் விவசாயிகளுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்சமயம் அரியலூர், விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பத்தாயிரம் ஏக்கருக்கும் அதிகமாக செங்கரும்பு பயிரிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இதன் மூலம் கணிசமான அளவில் வருவாய் பெற்று தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

     

    கோப்பு படம்

    அதே சமயம், விவசாயிகளிடமிருந்து இக்கரும்பை கொள்முதல் செய்யும் போது இடைத்தரகர்கள் தலையிட்டு, கரும்பிற்கு கிடைக்கவேண்டிய நியாயமான விலை பெறமுடியாமல் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், தமிழக அரசு ஒரு கட்டு கரும்பிற்கு ரூபாய் 400 வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலைகளில் நின்று போராடி வருகின்றனர்.

    விவசாயிகள் ஏற்கனவே மழை, வெள்ளம் மற்றும் இடுபொருள்களின் விலை ஏற்றம், தட்டுப்பாடு போன்ற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தான் இந்த கரும்பை சாகுபடி செய்துள்ளனர். ஆகையால் கடந்த ஆண்டைவிட அதிகமான கொள்முதல் விலை கிடைத்தால்தான் தங்களால் சமாளிக்க முடியும் என்ற நிலையில் பரிதவிக்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்கள் விளைவித்த கரும்பை, இடைத்தரகர்கள் இல்லாமல், அரசே நேரடியாக கொள்முதல் செய்து, தங்களுக்கு சேர வேண்டிய தொகையையும் அரசே நேரடியாக தங்களது வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

    இவற்றையெல்லாம், தமிழக அரசு கவனத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்த்து செங்கரும்பிற்கான கொள்முதல் விலையை உயர்த்தியும், இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் அரசே நேரடியாக கொள்முதல் செய்தும் அதற்கான தொகையை விவசாயிகளுடைய வங்கி கணக்கில் அரசே நேரடியாக சேர்க்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்

    Next Story
    ×