search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

    மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல் சேதம் அடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழையினால் பெருத்த பயிர்ச்சேதம் ஏற்பட்ட நிலையில், இதற்கென அமைக்கப்பட்ட குழு ஆய்ந்து அறிக்கை அளித்ததன் அடிப்படையில் முழுமையாக சேதமடைந்த இடங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6,038 ரூபாய் மதிப்பீட்டில் இடு பொருட்கள் வழங்கப்படும் என்றும் நவம்பர் மாதம் முதல்-அமைச்சர் அறிவித்து இருந்தார்.

    இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்ததை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற தற்போதைய முதல்-அமைச்சரின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி நானும் 19.11.2021 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தேன். ஆனால், அதற்கு இதுநாள் வரை எவ்வித பதிலும் தரப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில், பயிர்ச்சேதம் அடைந்த விவசாயிகளுக்கு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக எவ்வித இடுபொருட்களும் விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே இதுநாள் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடைமைகளையும் இழந்தவர்களுக்கும், கால்நடைகளை இழந்தவர்களுக்கும் இதுவரை எந்தவித இழப்பீடும் வழங்கப்படாதது அனைவர் மத்தியிலும் ஓர் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகிழக்கு பருவமழை முடிந்து ஒருமாதத்திற்கு மேலாகி உள்ள நிலையில் மக்களுக்கான இழப்பீடு இன்னமும் சென்றடையவில்லை என்பது வேதனை அளிக்கும் செயலாகும். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த நிலையில், பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்சம் ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4,719 கோடியே 62 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 6,230 கோடியே 45 லட்சம் ரூபாயை விடுவிக்க உள் துறை அமைச்சகத்திற்கு அறிவுரை வழங்குமாறு பிரதமருக்கு, முதல்-அமைச்சர் கடந்த 29-ந்தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். இது மட்டுமல்லாமல் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியும் முழுமையாகப் பயன் படுத்தப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    அப்படியென்றால், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு மத்திய அரசின் பங்காக 2021-2022-ம் ஆண்டில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்ற விவரத்தையும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ஏதாவது ஒதுக்கப்பட்டதா என்ற விவரத்தையும், இதுவரை எத்தனை கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்ற விவரத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசிற்கு உண்டு.

    தமிழ்நாடு அரசின் முதல் கோரிக்கை மனு 16.11.2021 அன்றும், 2-வது கோரிக்கை மனு 25.11.2021 அன்றும் 3-வது கோரிக்கை மனு 15.12.2021 அன்றும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 29.11.2021 முதல் 22.12.2021 வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இது தொடர்பாக பிரதமரையும், மத்திய உள் துறை அமைச்சரையும் நேரில் சந்திக்கச் சொல்லி, தமிழ்நாட்டின் கோரிக்கையினை வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தைக் கொடுத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியைப் பெற்றிருக்கலாம்.

    முக ஸ்டாலின்

    அவ்வாறு செய்திருந்தால் தமிழ்நாட்டிற்கான நிதி இன்றைக்கு பெறப்பட்டு இருக்கும். அவ்வாறு செய்யாமல், தற்போது கடிதம் எழுதுவது என்பது தமிழ்நாட்டு மக்கள் மீது தி.மு.க.விற்கு உள்ள அக்கறையின்மையை தெளிவுபடுத்துகிறது. இதன் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகளும், பொதுமக்களும்தான்.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதி வரும் வரை காத்திருக்காமல், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வற்புறுத்திய ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் வழங்கவும், வெள்ளத்தினால் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


    Next Story
    ×