search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிடவேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்

    சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் 51 சதவீதம் அளவுக்கும், காஞ்சிபுரத்தில் 73 சதவீதம் அளவுக்கும் அதிகரித்திருப்பது மூன்றாவது அலை பரவலின் விளிம்பில் தமிழ்நாடு இருப்பதையே காட்டுகிறது.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையின் தினசரி கொரோனாத் தொற்று நேற்று ஒரு நாளில் மட்டும் 51 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அதனால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

    இந்தியாவில் இது மூன்றாவது அலையை உருவாக்கும் என்று நோயியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

    சென்னையில் தினசரி கொரோனா வைரஸ் பரவல் 51 சதவீதம் அளவுக்கும், காஞ்சிபுரத்தில் 73 சதவீதம் அளவுக்கும் அதிகரித்திருப்பது மூன்றாவது அலை பரவலின் விளிம்பில் தமிழ்நாடு இருப்பதையே காட்டுகிறது.

    இதை உணர்ந்து கொண்டு, கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு

    இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையே ஓமைக்ரான் எளிதாக தாக்கும் போது, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாத பள்ளிக் குழந்தைகளின் நிலையை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், நிலைமை சீரடையும் வரை பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அளிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும்.

    எனவே, தமிழ்நாட்டில் நிலைமை சீரடையும் வரை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×