search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரேமலதா விஜயகாந்த்
    X
    பிரேமலதா விஜயகாந்த்

    புதிய செயல் தலைவர் பதவி குறித்து விஜயகாந்த் அறிவிப்பு வெளியிடுவார்- பிரேமலதா

    பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார்.
    சென்னை:

    சென்னை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு புனித தோமையார் மலை தேவாலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இதில் கலந்து கொண்டு இனிப்பு மற்றும் பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் தே.மு.தி.க.வில் உங்களுக்கு செயல் தலைவர் பதவி வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பிரேமலதா கூறியதாவது:-

    சமீபத்தில் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் என்னை அந்த பதவியை ஏற்க வலியுறுத்தியும் மாவட்ட செயலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஒட்டுமொத்த நிர்வாகிகளின் கருத்தை கேட்டு பெற்று செயல் தலைவர் பொறுப்பை ஏற்படுத்துவது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் விஜயகாந்த் அதிகார பூர்வமாக அறிவிப்பார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிடுகிறது. இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க. தயாராகி வருகிறது. போட்டியிடுவதற்கு கட்சியினர் ஆர்வமுடன் உள்ளனர்.

    விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக வந்த செய்தியை பார்த்து நான் வியந்தேன். தவறான செய்தி அது. விஜயகாந்த் தற்போது கட்சிப்பணிகளை பார்ப்பதுடன் உடற்பயிற்சியை மேற்கொண்டு ஓய்வில் இருக்கிறார்.

    அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.

    பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பெண்கள் கல்லூரி படிப்பை முடித்து, உடல், மன ரீதியாக பாதுகாப்புடன், எதிர்காலத்தை திட்டமிட உதவும்.

    என்றாலும் கிராமங்களில் 18 வயதில் திருமணம் செய்யவே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். எனவே இது தொடர்பாக இந்தியா முழுவதும் மக்கள் கருத்தையும் கேட்க வேண்டும்.

    அரசு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும். பொதுமக்கள் தவறாமல் முகக்கவசத்தை அணிய வேண்டும். கொரோனா, ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்.

    மேடையில் சீமான் செய்த செயல் தவறானது. சீமான் செய்ததற்கு, பதிலுக்கு பதிலாக தி.மு.க.வினர் செய்ததும் அரசியல் தான். தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் விதமாக அவர்கள் இப்படி நடந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு பிரேமலதா கூறினார்.


    Next Story
    ×