search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா சுப்பிரமணியன்

    ஒமைக்ரானை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் 2½ லட்சம் படுக்கைகள் தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    உலகில் பல நாடுகளில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இதுவரை 415 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டெல்டா கொரோனா வைரசை விட வேகமாக பரவும் தன்மை உடையதாக இது இருப்பதால் இதை கட்டுப்படுத்த மருத்துவ உலகம் போராடுகிறது.

    ஒமைக்ரானை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், தேவையான முன்னேற்பாடுகளை செய்து வைக்கவும் அனைத்து மாநில அரசுகளும் உஷார் படுத்தப்பட்டன.

    தமிழகத்திலும் ஒமைக்ரான தொற்று மெல்ல கால்பதித்து வேகமாக பரவ தொடங்கி உள்ளது. 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவதுறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் ‘கூட்டம் கூடுவதை தவிருங்கள். கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே நடமாடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

    கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதே போல் ஒமைக்ரான் பரவல் அதிகரித்தால் எதிர் கொள்ள தயாராக இருக்கும்படி சுகாதாரத்துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் 7 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி விட்டார்கள். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏதாவது அசவுகரியமாக தெரிந்தால் உடனே ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

    கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சையில் இருப்பவர்களை நான் நேரில் சென்று பார்த்தேன். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

    ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று கூறப்படுவதால், ஒருவேளை பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால் அதை எதிர் கொள்ளவும் அரசு தயாராக உள்ளது.

    ஒமைக்ரான் பாதிப்பு

    அரசு மருத்துவமனைகளில் 1¼ லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது போல் சிறப்பு மையங்களும் தயார்படுத்தப்படுகிறது. இந்த மையங்களிலும் 1¼ லட் சம் பேரை தங்க வைக்கும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 2½ லட்சம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறைதான் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. ஆனால் அதன் பிறகு முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டன.

    ஒமைக்ரானை பொறுத்தவரை தொற்று ஏற்பட்டாலும் நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சினை போன்ற கோளாறுகள் யாருக்கும் ஏற்படவில்லை.

    எனவே ஆக்சிஜன் தேவை என்பது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாக வராது என்று கருதுகிறோம்.

    இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் 220 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டது. இப்போது 1,400 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே வராது.

    அரசின் வழிகாட்டு நெறிகளை பொதுமக்கள் கடைபிடித்தால் போதும். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தி விட முடியும். எல்லோரும் ஒத்துழைத்தால் ஒமைக்ரானை எளிதாக கடந்து செல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கொரோனாவின் போது தொற்று உறுதியானவர்கள் தனி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த முகாம்கள் அனைத்தையும் மீண்டும் அமைக்கவும், கூடுதல் முகாம்களை உருவாக்கவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.


    Next Story
    ×