என் மலர்
செய்திகள்

திருவள்ளூர் அருகே ரெயில்வே தண்டவாள மின்கம்பத்தில் தூக்கில் வாலிபர் பிணம்- கொலை செய்யப்பட்டாரா?
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் உள்ள மின் கம்பத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, திருவள்ளூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது பாக்கெட்டில் மாம்பலத்தில் இருந்து திருத்தணி செல்வதற்கான மின்சார ரெயில் டிக்கெட் இருந்தது. அவர் யார்? என்பது தெரிய வில்லை.
தூக்கில் கிடந்த இடத்தில் இறந்தவரின் கால் தரையில் படும்படி காணப்பட்டது. உடலில் காயங்கள் இல்லை. எனவே மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து விட்டு உடலை தூக்கில் தொங்கவிட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்களின் விவரத்தை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.