search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு விபத்தில் தரைமட்டமான வீடு.
    X
    பட்டாசு விபத்தில் தரைமட்டமான வீடு.

    சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு விபத்து: ஒருவர் பலி

    பாலமுருகன் வீட்டில் சரவெடி தயாரிக்கும் பணி நடந்து வந்தன. இன்று காலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட்டில் வழக்கமாக ஊழியர்கள் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி எஸ்.பி.எம். தெருவில் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது பட்டாசு தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தன. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    தற்போது பாலமுருகன் வீட்டில் சரவெடி தயாரிக்கும் பணி நடந்து வந்தன. இன்று காலை வீட்டின் அருகே அமைக்கப்பட்டுள்ள தகர ஷெட்டில் வழக்கமாக ஊழியர்கள் பட்டாசுகளை தயாரித்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அருகில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகளுக்கும் பரவி பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கியது. வெடி விபத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கி கூக்குரலிட்டனர். தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேலாக வெடி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இதனால் அந்த பகுதியில் யாரும் செல்ல முடியவில்லை. வெடி விபத்தில் வீடு தரைமட்டமானது. அருகில் இருந்த 8 வீடுகள் சேதம் அடைந்தன.

    விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகராஜ், ராஜீவ்காந்தி மனைவி செல்வி (வயது 35), முத்து செல்வி (38), பாலமுருகன் உள்பட 8 பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சண்முகராஜ் என்பவர் உயிரிழந்தார். மேலும் விபத்தில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என போலீசார் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜ், வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    இதையும் படியுங்கள்... காபூலில் உள்ள நார்வே தூதரகத்தைக் கைப்பற்றிய பின்னர் தலிபான் செய்த அட்டூழியம்

    Next Story
    ×