search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாவரவியல் பூங்காவில் உள்ள சிறுவர் ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள்
    X
    தாவரவியல் பூங்காவில் உள்ள சிறுவர் ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்த சுற்றுலா பயணிகள்

    கடற்கரை, படகு குழாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. சுற்றுலா பயணிகள் பொழுதை கழிக்க பல்வேறு இடங்கள் உள்ளதால் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் இங்கு வருவது வழக்கம். நேற்று வார இறுதிநாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    சுற்றுலா இடங்களான கடற்கரை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் பகுதியில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். தாவரவியல் பூங்கா, பாரதி பூங்காவில் சுற்றுலா பயணிகள் தங்கள் பிள்ளைகளுடன் பொழுதை கழித்தனர். தாவரவியல் பூங்காவில் உல்லாச ரெயிலில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்தனர். நோணாங்குப்பம் படகுகுழாமில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து, பாரடைஸ் பீச்சுக்கு சென்று மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகையால் புதுச்சேரி நகர பகுதியில் முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை காண முடிந்தது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர்.

    காந்தி வீதியில் நேற்று நடந்த சண்டே மார்க்கெட்டில் உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகளவு திரண்டு துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்களை பேரம் பேசி வாங்கிச்சென்றனர். அங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் சூழல் நிலவியது.
    Next Story
    ×