search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
    X
    முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

    அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

    தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது. திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்று இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலேயே சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை இல்லத்துக்கு சென்ற வருமான வரித்துறையினர் அங்கு பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது.

    அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வருமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் தொழில் அதிபருமான சந்திரசேகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.8 கோடி பணம் சிக்கியது.

    இதேபோன்று அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடி வரை பணத்தை கைப்பற்றினார்கள்.

    இந்தநிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு கார்த்திக் மோகன், ஜி ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் தான் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே நேரத்தில் இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    Next Story
    ×